தவறாக நடந்துகொண்டால் கடுமையான சட்டநடவடிக்கை! காவல்துறையினருக்கு அமைச்சர் எச்சரிக்கை
போதைப்பொருள் வியாபாரம் உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பெரும் தடையாக இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் வியாபாரம், இலஞ்சம் பெற்றுக்கொள்ளல் மற்றும் போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்துவருகின்றாேம்.
பல்வேறு சட்டவிராேத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகள் பலர் இனம் காணப்பட்டிருக்கின்றனர்.
அத்துடன் இவ்வாறு சட்டவிராேத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இருப்பதுடன் அவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
மேலும் காவல்துறை திணைக்களத்தில் கடமையில் இருக்கும் அதிகாரிகள் சிலர் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.
இவ்வாறான காவல்துறை அதிகாரிகளின் செயற்பாடு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு பெரும் தடையாக இருக்கின்றது. அதனால் இதுதொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.