மக்கள் வரிசைகளில் நிற்கும் போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை எனக் கூறும் அமைச்சர்கள்!
மக்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசைகளில் நிற்கும் போது சில அமைச்சர்கள் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று எந்த அடிப்படையில் கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்ய பொது மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
மக்கள் மண் எண்ணெய், எரிபொருளை கொள்வனவு செய்ய அலைந்து திரியும் போது, எரிபொருள் தட்டுப்பாடு இல்லை, தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு அரசாங்கத்திடம் இருக்கின்றது என அமைச்சர்கள் கூறுகின்றனர்.
மேலதிகமாகவும் எரிபொருள் இருப்பதாக கூறுகின்றனர். மேலதிகமாக எரிபொருள் இருப்பதால், சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் எரிபொருள் கொள்கலன் வண்டிகளை திருப்பி அனுப்புவதாகவும் அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்களுக்கு புலப்படும் இந்த விடயம் பற்றி இப்படி பொய்களை கூறுவார்கள் என்றால், கண்ணுக்கு தெரியாத எத்தனை விடயங்களை மக்களுக்கு மறைத்திருப்பார்கள் என்பது எம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.
குடும்ப ஆட்சி, முழு நாட்டை சிக்கலாக மாற்றியுள்ளது. நாட்டில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு வரும் விதத்தை பார்க்கும் போது இனிவரும் காலங்களில் மின் துண்டிக்கப்படும் நேரத்திற்கு பதிலாக மின் விநியோகம் வழங்கப்படும் நேரம் பற்றி அறிவிக்க நேரிடும்.
மக்களுக்கு தொடர்ந்தும் மின் விநியோகத்தை வழங்குவது தொடர்பான விடயங்களை அறிவிக்கவே பொது பயன்பாட்டு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எனினும் மக்களை பல மணி நேரம் இருளில் வைக்கும் நேரத்தை அறிவிக்கும் ஆணைக்குழுவாக அது மாறியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
