"பொய்யர்களிடமும் கள்வர்களிடமும் அகப்பட்ட விவசாய அமைச்சு" எம்.எம்.மஹ்தி குற்றச்சாட்டு
இலங்கையின் விவசாயத்துறை பாதிக்கப்பட்டதற்கு விவசாய அமைச்சானது பொய்யர்களிடமும் கள்வர்களிடமும் அகப்பட்டமையே காரணம் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று (6) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
நாடும் நாட்டு மக்களும் முகங்கொடுக்கும் தட்டுப்பாடு, விலையுயர்வு, உணவுப் பஞ்சம் என்பவற்றுக்கு இவ்வாறான கள்வர்களும் பொய்யர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டமையே உண்மைக் காரணமாகும்.
இரசாயன உர இறக்குமதியை நிறுத்தியமை, இறக்குமதி செய்யப்படாத சேதன உரக் கப்பலுக்கு கட்டணம் செலுத்தியமை, உரிய நேரத்திற்கு சேதனப் பசளையை கூட வழங்காமை, சிறு போகத்திற்கு இரசாயன உரம் வழங்கப்படும் என பொய்களை கூறி விவசாயிகளை ஏமாற்றியமை, என்பன இவற்றிற்கு சிறந்த சான்றுகளாகும்.
நாம் எதிர்பார்ப்பது போன்று உணவு பஞ்சம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விவசாயத்துறையை பொறுப்பேற்றிருந்த அமைச்சர்களே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
