படுதோல்வியடைந்த கோட்டாபய அரசாங்கம்! கடும் சீற்றத்தில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
கொரோனா வைரஸ் நிலைமைகளைக் கையாள்வதில் ராஜபக்ச அரசு படுதோல்வியடைந்துள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
கொரோனா விடயத்தில் அரசு இப்போதும் பொய்யான தரவுகளையே கூறுகின்றது. ஆனால், அமெரிக்கவின் வொஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையில் இலங்கையில் செப்டெம்பர் மாதமளவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் அரசிடம் இருந்தாலும் அவர்கள் அதனை வெளிப்படுத்த மறுக்கின்றனர்.
இப்போதுள்ள நிலைமையில் நாட்டை முறையாக நிர்வகிக்காது விட்டால், ஊழியர்களை முறையாக வழங்க முடியாவிட்டால், குறைந்தது இரண்டு வாரங்களேனும் நாட்டை முடக்காது விட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் போன்றவர்கள் தூரநோக்குடன் இது குறித்து சிந்திக்காது போனால் இந்த நாடும் இந்தியாவைப் போன்றதொரு நிலைமையை அடையும். அவ்வாறான நிலையொன்றை உருவாக்க எம்மால் இடமளிக்க முடியாது.
தகுதியான சுகாதார அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு இராணுவமும், தகுதி இல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் அரச நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ள காரணத்தால் இந்தியாவின் நிலையொன்று இலங்கைக்கும் ஏற்படும் அச்சம் உள்ளது.
இந்தநிலையில், ஆட்சியாளர்களை நம்பிய பொதுமக்கள் இறுதியாக வீதிகளில் இறந்து கிடக்கும் நிலையை உருவாக்கிவிட வேண்டாம் என்றார்.