வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் : அலி சப்ரி மீது கடும் விமர்சனம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து தவறாக வழிநடத்தும் ஒரு நடவடிக்கையாகும் என சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை குறித்த ஆய்வாளர் அலன் கீனன் (Alan Keenan) தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்ட பதிவொன்றிலேயே குறித்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “வெளிவிவகார் அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் 2000 ஆண்டு முதல் 2009 வரையில் தங்கள் உறவுகள் காணாமல் போனதாக 6047 பேர் மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுருந்தார்.
அதிகாரத்துவ பொறிமுறை
இந்த எண்ணிக்கை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய வெளிப்படைத் தன்மையற்ற அதிகாரத்துவ பொறிமுறைகளின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டிருக்கலாம்.
#SriLanka foreign minister's claim "only 6047 people have complained from 2000-2009 their loved ones are disappeared" is very misleading, even if it could be based on some combination of the many tangled & non-transparent bureaucratic "mechanisms" established by the state. 1/ https://t.co/bk3EmrLYJB
— Alan Keenan (@akeenan23) August 30, 2024
2000ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு என்பது 1970களின் பிற்பகுதியில் (இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர்) ஆரம்பித்த அரசாங்கத்திற்கும் தமிழ் போராளிகளிற்கும் இடையிலான கிளர்ச்சி, கிளர்ச்சி எதிர்ப்பு யுத்தத்தின் ஈவிரக்கமற்ற ஒரு சிறிய காலம் மாத்திரமே. இந்த காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனார்கள்.
தங்கள் குடும்பத்தவர்களை காணவில்லை என முறையிட்ட 6047 பேரில் சிலர் அல்லது பலர் குடும்பத்தில் பலரை இழந்திருக்கலாம் எனவே காணாமல் போனவர்களின் எண்ணிக்கை காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகளை விட கணிசமான அளவு அதிகமாகயிருக்கலாம்.
இராணுவ குழு
பல தசாப்தங்களாக ஆணையகங்கள் குழுக்கள் மற்றும் பல்வேறு பிற தகவல் சேகரிப்பு செயல்முறைகளுக்குப் பிறகு காணாமல் போனவர்களின் பல குடும்பங்கள் சோர்வடைந்துள்ளன சலிப்படைந்துள்ளன கோபமடைந்துள்ளன தாங்களாகவே இறந்துவிட்டன அல்லது காவல்துறையினர் மற்றும் இராணுவத்தால் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன-இதனால் முறைப்பாடு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது.
இடது சாரி சிங்கள ஜேவிபியின் இரண்டு கிளர்ச்சிகளின் போதும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசபடையினர் துணை இராணுவ குழுக்களால் காணாமலாக்கப்பட்டனர் என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இவை குறித்து மிகச்சிறிய எண்ணிக்கையிலான வழக்கு விசாரணைகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளன சில உண்மைகள் மாத்திரம் வெளிவந்துள்ளன. நான்கு தசாப்தகால வன்முறைகளின் போது அனைத்து இனங்கள் மதங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பல தசாப்தங்களாக உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த வேண்டுகோள்களிற்கு இலங்கை அரசாங்கங்கள் அளித்து வரும் மறுப்பு மற்றும் பொறுப்பை திசைதிருப்பும் பதிலையே இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் பேட்டியில் வழங்கியுள்ளார்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |