காணாமல் போனோர் விவகாரம் - கோட்டாபய, டக்ளஸிடம் விடுத்த உத்தரவு
காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ(gotabaya),அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு(Douglas Devananda) உத்தரவிட்டுள்ளார்.
அரச தலைவருக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று முன்தினம் (29.10.2021) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் காணாமல் போனோரின் உறவினர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டிருந்தனர்.
அதனடிப்படையில் கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொரோனா பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலைமையினால் குறித்த சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த சந்திப்பில் குறித்த விவகாரம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடிய அரச தலைவர், காணாமல் போனோரின் உறவினர்களின் விவகாரத்தினை தீர்த்து வைக்கும் வகையிலான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
உறவுகள் காணாமல் போனதினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகளை கவனத்திலெடுத்து அவற்றினை தீர்ப்பதற்கும், தேவையான பரிகாரங்களை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச, இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.