அதிகரிக்கும் போர் பதற்றம் : முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர கூட்டம்
இந்தியா (India) - பாகிஸ்தானிடையே (Pakistan) பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் பிரதமர் மோடிக்கும் (Narendra Modi) முப்படை தளபதிகளுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் (10.05.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் (Jammu & Kashmir) பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதல்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக கடந்த 07ஆம் திகதி இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டது.
மேலும், பாகிஸ்தானில் (Pakistan) உள்ள 3 விமானப்படை தளங்களை குறி வைத்து இந்தியா இன்று தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவசர ஆலோசனை கூட்டம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
A high level meeting was chaired by PM @narendramodi at 7, Lok Kalyan Marg. Those who attended the meeting included Defence Minister @rajnathsingh, NSA Ajit Doval, CDS General Anil Chauhan, armed forces chiefs and senior officials. pic.twitter.com/mECIeuREKz
— PMO India (@PMOIndia) May 10, 2025
இருநாடுகளும் மாறிமாறி எல்லைப் பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால், தற்போது இரண்டு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக முப்படை தளபதிகளும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க, அவரது இல்லத்திற்கு வந்தனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் ஆகியோரும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் எந்த ஒரு தகவலையும் பிரதமர் மோடியின் அலுவலகம் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லைகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமரின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
