அதிர்வை ஏற்படுத்திய யாழ். கலாச்சார நிலைய பெயர் மாற்றம்: சர்ச்சைகளுக்கு மத்தியில் வரவேற்கும் மோடி
யாழில் (Jaffna) அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், இந்திய உதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிர்மாணிக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க சின்னமாக திகழும் கலாசார நிலையத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டதை வரவேற்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவருக்கு (Thiruvalluvar) மரியாதை செலுத்தப்படுவதோடு இந்திய - இலங்கை மக்களிடையிலான கலாசார, மொழி, வரலாற்று, மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கான சான்றாகவும் இது திகழ்வதாக இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்திற்கு தெய்வப் புலவரான திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டமை தொடர்பில் பெருமகிழ்வடைதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் (S. Jaishankar) கூறியுள்ளார்.
Welcome the naming of the iconic Cultural Center in Jaffna built with Indian assistance, as ‘Thiruvalluvar Cultural Center’. In addition to paying homage to the great Thiruvalluvar, it is also a testament to the deep cultural, linguistic, historical and civilisational bonds… https://t.co/51DoyPt7el
— Narendra Modi (@narendramodi) January 18, 2025
இந்திய - இலங்கை உறவுக்கு சான்றாக அமைந்துள்ள கலாசார மையமானது இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான ஒரு அபிவிருத்தி திட்டமாகும் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
யாழ்.கலாசார மையம், திருவள்ளுவர் கலாசார மையமாக பெயர் மாற்றப்பட்டமை தமிழின் பெருமையை பரப்புவதற்கான பிரதமர் மோடியின் மற்றுமொரு மைல்கல் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
இது இந்தியா - இலங்கை இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இதேவேளை, யாழில் (Jaffna) அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட பின்னணியில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இருக்குமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான 'யாழ்ப்பாணம்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்குமோ என்ற நியாயமான சந்தேகத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
அத்துடன் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
மேலும் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar), யாழில்(Jaffna) திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றம் அல்ல. யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பெயர்களான யாழ். கலாசார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |