தமிழர் பகுதியில் பரபரப்புக்கு மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை
அம்பாறையில் (Ampara) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பிற்கும் மத்தியிலும் குறித்த சிலை நேற்று (19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திருவள்ளுவர் சிலை அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு ஏழு நாட்களுக்குள் அகற்றுமாறு மாநகர சபை உத்தரவு பிறப்பித்து தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை உத்தரவு
அத்துடன் சிலையை அகற்ற தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் கலாசார பேரவை தலைவர், செயலாளர், உப தலைவர் ஆகியோருக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த திருவள்ளுவர் சிலை நேற்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மற்றும் வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ், கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |