வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க வேண்டும்..! லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்
சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தைத் தொடரத் தவறினால், நுகர்வோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க வேண்டும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் சந்தையில் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று (16.11.2026) நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நுகர்வோர் விவகார அதிகார சபை
கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு விலையை நிறுவனம் அதிகரித்திருந்தது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாயிலிருந்தும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாயிலிருந்தும் அதிகரிக்கப்பட்டது.
இந்தநிலையில், லாஃப்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்தபோது, சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரை எடுத்துச் சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதன்போது, எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு நிறுவனப் பிரதிநிதிகளிடம் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று கூடவுள்ளதாகவும், அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும் எனவும் நிறுவனப் பிரதிநிதிகள் அதிகார சபையிடம் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |