குப்பையோடு குப்பையாகச் சென்ற 150,000 ரூபா! பின்னர் நடந்த முன்மாதிரியான செயல்
திண்மக்கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் கண்டெடுக்கப்பட்ட 150,000 ரூபா பணத்தை அவ்வீட்டு உரிமையாளரிடமே ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
இந்த முன்மாதிரியான செயற்பாட்டை பாராட்டி, கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளர் உள்ளிட்ட 05 ஊழியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (01) மாநகர சபை வளாகத்தில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி கல்முனை நகர மண்டப வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது தங்க நகையொன்றை வங்கியில் அடகு வைத்து, பெற்றிருந்த 150, 000 ரூபா பணமும் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் சென்றுள்ளது.
அப்பொதி கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், நீண்ட நேரத்தின் பின்னர் வீட்டில் இருந்த பணம் காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டதை தொடர்ந்து, இவ்விடயம் திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவர் உடனடியாக செயற்பட்டு, வாகனம் வேறொரு பகுதியில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அவர் வாகன சாரதி மற்றும் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக்குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து, பணத்தை தேடிக்கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.
இதன் மூலம் கல்முனை மாநகர சபைக்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்தமைக்காகவே குறித்த மேற்பார்வையாளர், வாகன சாரதி மற்றும் தொழிலாளர்கள் உட்பட 05 ஊழியர்களும் மாநகர சபை நிர்வாகத்தினால் இவ்வாறு விருது வழங்கி கௌரவிக்கபட்டுள்ளனர்.