யாழில் தனியார் விடுதிகளின் பெயர்களை பயன்படுத்தி பணமோசடி!
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதிகளின் பெண்களின் பெயர்களை பயன்படுத்தி பாரிய பண மோசடிகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப் , வைபர், முகப்புத்தகம் மற்றும் ஏனைய இணையத்தளங்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதிகளில் பெண்களின் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி போலியாக விளம்பரங்களை பிரசுரித்து குறித்த பண மோசடி இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
பண மோசடி
இதன்படி விளம்பரப்படுத்தலை நம்பி சிலர் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை கேட்கும் போது, தனியார் விடுதியில் பெண் உள்ளதாகவும், கோரிக்கைக்கான பணத்தினை வைப்பிலிடுமாறும் கூறி பணத்தினை பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதன்போது கோரிய பணத்தினை வழங்கியவர்கள் அந்த விடுதிகளில் சென்ற பின்னர் தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்து விளம்பரப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முயன்ற போது அது செயலிழந்து காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்ய தயங்குவதால், தொடர்ந்து குறித்த கும்பல் பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நற்பெயர்களுக்கு களங்கம்
இதேவேளை, குறித்த கும்பல்கள் சமூக வலைத்தளங்களில் யாழில் உள்ள தனியார் தங்குமிட விடுதிகளின் பெயர்களை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதனால் , குறித்த தங்குமிடங்களின் நற்பெயர்களுக்கு களங்கம் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தொடர்பில் காவல்துறையினர் அவதானம் செலுத்தி குறித்த குற்றத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
