தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி : கொந்தளிக்கும் சிறிலங்கா அரசு
கனடாவில் (Canada) உருவாக்கப்பட்டுள்ள “தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி” தொடர்பில் அறிக்கை ஒன்றை கோருவதற்கு எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
தென்னிலங்கையில் உள்ள ஊடகம் ஒன்று இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின் போதே வெளிவிவகார அமைச்சு (Ministry of Foreign Affairs) இதனை தெரிவித்துள்ளது.
கனடாவின் பிராம்ரன் நகரின் சிங்கௌசி பொது பூங்காவில் கடந்த 10ஆம் திகதி 4.8 மீற்றர் உயரத்தில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது.
இனப்படுகொலை
உலகில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் துன்பியல் வரலாற்றைக் கூறும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகவும் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை உலகுக்கு கூறும் வகையிலும் குறித்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஈழம் வரைபடத்தை உள்ளடக்கிய தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாவது, “இந்த நினைவுத்தூபி தொடர்பாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமிருந்து அறிக்கை ஒன்றை கோருவதற்கு எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நினைவுச்சின்னம்
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளில், 2021ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பாக இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் உள்ளிட்ட கனடாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம், விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாக்கியதாகக் கூறப்படும் தமிழீழ வரைபடத்தையும் உள்ளடக்கி நிறுவப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
அந்த நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கும் நிகழ்வில், ஒன்ராறியோவின் பிரதி அமைச்சராகவும், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த விஜய் தணிகாசலம் என்பவரும் கலந்துகொண்டிருந்ததை சமூக ஊடகங்களில் பரவிய கதணொளிகளில் காணமுடிந்தது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமிருந்து அறிக்கை ஒன்றை கோருவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
