செம்மணி மனித புதைகுழி: நாளையதினம் வரப்போகும் மேலதிக தகவல்கள்
செம்மணி மனிதப் புதை குழி அகழ்வின் இரணடாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் இன்றையதினம்(08) முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 50 முழுமையாக அகழ் எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டாவது பிரதேசமாக நீதிமன்றத்தால் பிரகடனம்
இன்றையதினம், ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான பகுதி என தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதுவாவினால் அடையாளமிடப்பட்ட பகுதி அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான இரண்டாவது பிரதேசமாக நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான முதலாவது பகுதி
அத்துடன் ஏற்கனவே முதலில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அகழ்வாராய்ச்சி பகுதியானது அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான முதலாவது பகுதியாகவும் அடையாளப்படுத்துப்பட்டுள்ளது.
அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதியில் 3 மனித என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டிருக்கிறது. நாளைய தினத்திலிருந்து இலக்கமிடல் பணிகள் ஆரம்பமாகும்.
நாளையதினம் மேலதிக தகவல்கள்
மனித எலும்புகளுடன் சேர்ந்த துணிகள் மற்றும் சப்பாத்து போன்ற பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டு வைத்திருக்கப்பட்டுள்ளன. அவை இன்னமும் நிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படவில்லை. அது பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் மேலதிக தகவல்கள் நாளையதினம் வழங்கப்படும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
