மன்னார் இளம் தாயின் மரணம்..! ஊழியர்களின் அசமந்த போக்கே காரணம் - விசாரணையில் உறுதி
மன்னார் பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) இளம் தாய் உயிரிழந்த சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.
பட்டதாரியான இளம் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தனக்கு தொலைபேசிக்கு பல்வேறு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்..! மயங்கி விழும் வரை சிகிச்சை அளிக்கப்படவில்லை - கடுமையான குற்றச்சாட்டு
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்., மன்னார் (mannar) - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) என தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணின் மரணத்தின் போது சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.
சுயாதீன விசாரணை குழு
குறித்த மரணம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சினால் சுயாதீன விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளது. விசாரணைகளின் அடிப்படையில் சிலர் தவறிழைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக விசேட அறிக்கை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிரான நடவடிக்கைகள்
மேலும் மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைக் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த பெண் மரணமடைந்ததை தொடர்ந்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைகள் முடிவடைந்தவுடன் தவறிழைத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |