மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்..! மயங்கி விழும் வரை சிகிச்சை அளிக்கப்படவில்லை - கடுமையான குற்றச்சாட்டு
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் (Mannar District Hospital) நள்ளிரவில் குருதிப் போக்கினால் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் மரியராஜ் சிந்துஜா, அடுத்த நாள் காலையில் மயங்கி விழும் வரை உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணியான கனகரத்தினம் சுகாஷ் (Kanagaratnam Sugash) தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில் கனகரத்தினம் சுகாஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பிறந்து சில நாட்களேயான சிசுவைத் தவிக்கவிட்டுத் தாயார் மரணித்துள்ளார்.
நீதியான - வெளிப்படையான விசாரணை
உடனடியாகச் சிகிச்சையளித்திருந்தால் நிச்சயம் அவரைக் காப்பாற்றியிருக்கலாம்.
விடுதிக்குப் பொறுப்பான வைத்தியர்கள், தங்கும் விடுதியிலிருந்தும் தாதிய உத்தியோகத்தர் அறிவித்தும் விடியும்வரை சிகிச்சையளிக்க முன்வரவில்லை.
இது தவறல்ல, குற்றம். நீதியான - வெளிப்படையான விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.
உயிர்கள் அநியாயமாகக் காவு
அதன் மூலமே சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும் என்பதோடு நேர்மையாகப் பணிபுரியும் வைத்தியர்களின் சேவையும் போற்றப்படும்.
இந்நிலை தொடர்ந்தால் அரசியல் பிரச்சனைகளுக்காகப் போராடும் நாங்கள், மருத்துவ அலட்சியங்களுக்கு எதிராகவும் போராட வேண்டி ஏற்படும்.
எமது உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தயவுசெய்து பொறுப்போடு செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கனகரத்தினம் சுகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் சர்ச்சைக்குரிய இளம் தாயின் மரணம்: வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |