மன்னாரில் சர்ச்சைக்குரிய இளம் தாயின் மரணம்: வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்
மன்னார்(Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் மரணமடைந்த இளம் தாய் தொடர்பிலும் அவற்றுக்கான விசாரணை நீதியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பாகவும் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவருடன் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (3) மாலை சென்றிருந்தார்.
அண்மையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற பட்டதாரியான இளம் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் நடைபெறும் விசாரணைகள் பக்கச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.
இளம் தாயின் மரணம்
அதேநேரம் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என மன்னார் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரிக்கை முன்வைத்தார்.
தற்போது உடற்கூற்று பரிசோதனை கொழும்பில் (Colombo) நடைபெறுவதாகவும் அதற்குரிய முடிவுகள் இதுவரை கிடைக்கப்படவில்லை எனவும் அந்த உடற்கூற்று பரிசோதனை முடிவுகளை பொறுத்தே சட்ட நடவடிக்கைக்கு செல்வது தொடர்பாக முடிவெடுக்க முடியும் எனவும் வைத்தியசாலை பணிப்பாளரினால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளம் தாயின் மரணம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு, வடமாகாண ஆளுநர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் என நான்கு கட்டங்களாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் சந்திப்பின் பின்னர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |