முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட தாய் : சிக்கிய சந்தேக நபர்
புதிய இணைப்பு
முல்லைத்தீவில் (Mullaitivu) பெண்ணொருவர் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை சற்றுமுன்னர் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் பெண்ணொருவர் கொடூமாக தாக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது.
நபர் கைது
தனிப்பட்ட தகராறு காரணமாக நடுவீதியில் குறித்த பெண் மீது நபரொருவர் சரமாரி தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.
இதையடுத்து, குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டிருந்தனர்.
இதன்பின், சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு (Thurairasa Ravikaran) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு விரைந்த துரைராசா ரவிகரன், தாக்குதல் மேற்கொண்டிருந்த நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் அவரை கைது செய்ய கோரி முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழர் பிரதேசத்தில் நபரொருவரினால் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு (Mullaitivu) - ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு கைக்குழந்தைகளின் தாயே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகாராறு
தனிப்பட்ட தகாராறு காரணமாக குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் இடம்பெற்ற போது சுற்றி இருந்த எவரும் தாக்குதலை தடுக்க முற்பாடாததை காணொளியில் காணக்கூடியதாக இருந்தது.
இந்தநிலையில், சம்பவத்துடனான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அடக்குமுறை
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்து இது தொடர்பில் விரிவாக ஆராய வேண்டும் எனவும் பெண்கள் மீதான இவ்வாறான அடக்குமுறைகளை கண்டிக்க வேண்டும் எனவும் சமூக வலைதளவாசிகள் எச்சரித்துள்ளனர்.
அத்தோடு, அண்மையிலும் யாழ்ப்பாணத்தில் (Jaffna) சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.
இந்த சம்பவத்தில், 14 வயது சிறுமி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்