இளம் தாய் சிந்துஜாவின் மரணம் : வழக்கு விசாரணையில் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்
புதிய இணைப்பு
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்று (27.05.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மரியராஜ் சிந்துஜா என்பவர், கடந்த வருடம், 28.07.2024 அன்று வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்தார்.
மரணம் தொடர்பில் விசாரணை
இந்நிலையில் அவரின் மரணம் தொடர்பில் தொடரப்பட்ட இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையில், மன்னார் காவல்துறையினரால் வைத்தியசாலையில் சம்பவம் நிகழ்ந்த போது கடமையில் இருந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 17.06.2025 அன்று முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 17.06.2025 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவிற்கு தற்போது வரை நீதி கிடைக்கவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
மன்னார் - கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா, கடந்த ஆண்டு (28.07.2024) அன்று மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பிரசவத்தின் பின்னர் இரத்த போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா வைத்தியசாலை வைத்தியர், ஊழியர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
சிந்துஜாவின் மரணம்
இந்த மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் மருத்துவர்களின் அலட்சியத்தைக் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை முன் போராட்டங்கள் நடைபெற்றது, மேலும் ஒரு வைத்தியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் சிந்துஜாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது கணவர் மரியராஜ், 2024 ஓகஸ்ட் 24 அன்று வவுனியாவில் (Vavuniya) வைத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை நான்கு வழக்குகள் நடைபெற்று முடிந்துள்ளது.
எதிர்வரும் 27.05.2025 அன்று ஐந்தாவது தடவை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றதாகவும் இதுவரை வைத்தியசாலை நிர்வாகம் சிந்துஜாவின் உயிரிழப்பிற்கு எந்தவிதமான உண்மையான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

