புதிய பயங்கரவாத தடைச் சட்டம்: மானிப்பாய் பிரதேச சபையின் தீர்மானம்!
தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான பிரேரணையானது இன்று (23.01.2026) வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனால் சபையில் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
பிரேரணை
குறித்த பிரேரணையில் தவிசாளர் தனது கருத்தை முன்வைக்கையில், “பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமானது எமது இனத்திற்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தவுள்ளது.

2026ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி இந்த சட்டமானது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமானது இதற்கு முன்னர் இருந்த இரண்டு சட்டங்களை விடவும் மிகவும் கொடூரமான சரத்துக்களை கொண்டதாக காணப்படுகின்றது.
தற்போது அரசானது தேர்தல் வாக்குறுதிகளின்போது, தாம் ஆட்சிக்கு வந்ததும் பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்குவதாக தெரிவித்தது.
அதனை நிறைவேற்றுவது போல் அந்த சட்டத்தைவிட மிகவும் மோசமான சட்டத்தை கொண்டு வரவுள்ளது. எனவே, அந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்ற பிரேரணையை நான் இந்த மானிப்பாய் பிரதேச சபையில் கொண்டு வருகிறேன்.” என தெரிவித்தார்.
குறித்த பிரேரணை தொடர்பாக உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதனை கடுமையாக எதிர்த்தனர். பின்னர் பிரேரணையானது வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்களும் பிரேரணை தொடர்பில் நடுநிலை வகித்ததுடன், சபையில் இருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த பிரேரணையானது நிறைவேற்றப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |