யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் கோரப்படும் காணி! எழுந்துள்ள சர்ச்சை
வேலணை பிரதேச சபைக்கு உரித்தான மண்டைதீவு சுற்றுச்சூழல் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 2.5 ஏக்கர் காணியை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் தேவை கருதி கையகப்படுத்த யாழ். மாவட்ட செயலகத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்க முடியாதென வேலணை பிரதேச சபை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தூதுவராக செயற்படும் மாவட்ட செயலகத்தின் இந்த செயற்பாடு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி இருப்பதாகவும் வேலணை பிரதேச சபை குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வேலணை பிரதேச சபைக்கு கடந்த 15 ஆம் திகதியன்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறி யாழ். மாவட்ட செயலகத்தால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்கால வருமானம்
குறித்த கடிதத்தில், 15.01.2026 ஆம் தியதியன்று மாவட்ட செயலகத்தில் நடத்த கலந்துரைதாடலின் பிரகாரம் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் மண்டைதீவு சுற்றுச்சூழல் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 2.5 ஏக்கர் அரச காணியை இலங்கை கிரிக்கெற் கட்டுப்பாட்டுச் சபை கோரி வருவதால் குறித்த காணியில் எதிர்வரும் காலங்களில் எதுவித அபிவிருத்தி நடவடிக்கைதையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வேலணை பிரதேச சபை தவிசாளர் கூறுகையில்,

“வேலணை பிரதேச சபையானது ஒரு வருமானம் குறைந்த சபையாக இருக்கின்றது. நாம் சர்வதேச மைதானத்தை வரவேற்கின்றோம். அதே நேரம் எம்மிடம் இருக்கும் வளங்கள் முழுவதையும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் கொடுக்க முடியாது.
குறித்த காணி மைதானம் அமையும் சூழலில் இருப்பதால் அக்காணியில் பிரதேச சபை எதிர்காலத்தில் தனக்கான பெரும் வருமானம் ஈட்டும் வளமாக பயன்படுத்த முடியும்.
காணிக்கான கோரிக்கை
இதே நேரம் மைதானத்துக்கு தேவையான அளவு காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டமும் நடைபெறுகின்றது.
இந்நிலையில், ஆடம்பர விடுதிகள் மற்றும் பராமரிப்பு குடியிருப்புக்கள் உள்ளிட்ட இதர நோக்கங்களுக்காகவே காணி கோரப்படுகின்றது.

ஒரு வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கும் எமது சபை எதிர்காலத்தில் அந்த நிலப்பரப்பை மையமாக வைத்தே பாரியளவு வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனவே இந்த செயலை ஏற்க முடியாது.
இது எமக்குரிய காணி. எதிர்காலத்தில் பிரதேச சபையின் வருமான ஈட்டலுக்குரிய மூலதனமாக இருக்கின்றது. எனவே வேலணை பிரதேச சபைக்கு உரித்தான காணி என்பதால் சபையின் எதிர்காக நலன்கருதி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறித்த காணியை நாம் வேறு ஒருவருக்கு வழங்கும் நிலையில் நாம் இல்லை.
அது பிரேரணையாக முன்மொழிந்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |