பணிப்பாளர் நாயகம் கைது : மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் முடக்கம்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகள் கடந்த இரண்டு மாதங்களாக மந்தகதியில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பணிப்பாளர் நாயகம் கடந்த மார்ச் இறுதியில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், சுமார் 10 இலட்சம் வாகன இலக்கத் தகடுகளும், 3 இலட்சம் ஓட்டுநர் உரிமங்களும் விநியோகிக்கப்படாமல் இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள்
இது குறித்து மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக தேசப்பிரிய தெரிவிக்கையில், முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமை குறித்து அமைச்சு மட்டத்தில் கொள்கை ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும்.

அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பும் 14 'ஓப்லைன்' மாவட்ட அலுவலகங்களை, தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு 'ஒன்லைன்' மயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், இராணுவம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவியுடன் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிலுவை அட்டைகள் அச்சிடப்பட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படுகின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு மில்லியன் அட்டைகள் கிடைக்கவுள்ளன.
மேலும், புதிய விநியோகஸ்தர் மூலம் மே 10 முதல் இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நிலுவைகள் அனைத்தும் விரைவில் பூர்த்தி செய்யப்படும்“ என அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |