தங்கத்தை உமிழும் அதிசய எரிமலை... எங்கே உள்ளது தெரியுமா!
உலகில் மதிப்பு மிக்க உலோகங்களில் ஒன்றாக திகழும் தங்கத்தை விரும்பாதோர் யாருமே இருக்க முடியாது, மண்ணுக்குள் பொதிந்திருக்கும் இந்தப் புதையலை கண்டுபிடிப்பதற்கும், அதனை அகழ்ந்தெடுத்து உரிமை கொண்டாடுவதற்கும் உலகநாடுகள் போட்டியிட்ட வண்ணம் இருப்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
இத்தகைய மதிப்பு மிக்க தங்கத்தை நாள்தோறும் ஓர் எரிமலை கக்குகிறது என்பதை நம்ப முடியுமா, ஆம் இன்றளவும் செயற்பாட்டில் இருக்கும் எரிமலையொன்று தங்கத்தை உமிழ்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அது எந்த எரிமலை, அதிலுள்ள சிறப்புக்கள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்,
தங்கச் சுரங்கம்
அந்தாட்டிக்காவில் உள்ள மவுண்ட் ஏர்பஸ் (Mount Erebus) என்ற எரிமலை தினமும் 80 கிராம் தங்கத்தை கக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தினமும் கிட்டத்தட்ட 6,000 டொலர்கள் அதாவது இலங்கை பணமதிப்பில் சுமார் 18 லட்சம் ரூபா மதிப்புள்ள தங்கம் இந்த எரிமலையிலிருந்து வெளியேறுகிறது.
அதன்படி, 1972 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சுமார் 1,518 கிலோ தங்கத் துகள்கள் இந்த எரிமலையில் இருந்து தூசி வடிவில் வளிமண்டலத்தை அடைந்துள்ளன.
இதனால், எரிமலைக்கு அடியில் தங்கச் சுரங்கம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தங்கத் தூசி
621 மைல் தொலைவில் அமைந்திருந்தாலும், எரேபஸின் 12,448 அடி உயரம் காரணமாக தங்கத் தூசி தொலைதூர பகுதிகளை அடைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எரேபஸ் மலையானது ஒரு மெல்லிய மேலோட்டத்தின் மேல் அமர்ந்திருப்பதாக நாசாவும் விவரிக்கிறது, இதனால் உருகிய பாறைகள் பூமியின் உட்புறத்தில் இருந்து எளிதாக உயரும் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்த எரிமலையானது தொடர்ந்து வாயு மற்றும் நீராவியை வெளியிடுகிறது என்றும், எப்போதாவது இடம்பெறும் ஸ்ட்ரோம்போலியன் வெடிப்புகளில் பாறைகளை வெளியேற்றுகிறது என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |