அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டார் அலி சப்ரி ரஹீம் எம்.பி..!
அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது
7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று (24) காலை விமான நிலையத்தில் இருந்து வெளியேற முற்பட்ட போது, அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
இவர் துபாயிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் இலங்கை திரும்பினார்.
விமான நிலையத்தின் வி.ஐ.பி முனையமான "கோல்ட் ரூட்" இல் வைத்து இலங்கை சுங்கத்தின் வருவாய் பணி அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணை
அவரது பொதிகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 3.39 கிலோ தங்க நகைகள் மற்றும் 74 மில்லியன் ரூபாய் மதிப்பிலான தங்க பிஸ்கட்களை கண்டுபிடித்தனர்.
மேலும், சுமார் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான 91 கையடக்கத் தொலைபேசிகளும் அவரது பயணப் பொதியில் காணப்பட்டன.
பின்னர், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் அறிவிக்கப்பட்டது.
அதிகாரிகளால் ஏறக்குறைய ஐந்து மணிநேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கொடவத்தையில் உள்ள வருவாய் பணியக கிளைக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.