ரணிலின் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சி - சர்வதேச அழுத்தங்களே காரணம் - க.வி. விக்னேஸ்வரன்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் சாதகமாகவே அமைய வாய்ப்புள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகளாவிய நெருக்கடிகள் காரணமாகவே தமிழர் தரப்புடன் பேசுவதற்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகள் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சி
சர்வகட்சி மாநாட்டில் தமிழர்களின் தீர்வு விடயம் குறித்து கலந்துரையாடும் பொழுது பெரும்பான்மையின காட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எதிர்க்கருத்துக்களை முன்வைக்காததால் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக அமையலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம், ஜி.எஸ்.பி வரிச்சலுகை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய உறுதிமொழிகள் போன்றவற்றிற்காக இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு குறித்து தமிழர் தரப்புடன் கலந்துரையாடுவதற்கான முயற்சியை எடுத்திருக்கலாம் என க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.