இந்திய துணைத் தூதுவரை சந்தித்த முன்னாள் எம்பி திலகராஜா
சிறிலங்காவிற்கான இந்திய உதவி உயர்ஸ்தாணிகர் முனைவர் எஸ். ஆதிரவை(Dr. S. Adira) முன்னாள் நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா ( Mayilvakaṉam TilakaRaja)சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தாணிகரின் தலைமையில் இயங்கும் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அத்தகைய உதவிகளைப் பெறுபவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது அவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பது முதலான விடயங்களைக் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் நிதியத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்கனவே புலமைப் பரிசில் பெற்றவர்களை ஒருங்கிணைத்து அவர்களது அடைவுகளை அடையாளப்படுத்துவதன் ஊடாக எதிர்கால மாணவ சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கக் கூடிய திட்டங்கள் குறித்தும் தனது முன்மொழிவுகளை துணைத்தூதுவரிடத்தில் தான் சமர்ப்பித்ததாகவும் திலகராஜா தெரிவித்து உள்ளார்.
குறித்த நிதியத்தின் கீழ் தான் புலமைப்பரிசில் உதவிகளைப் பெற்றுக் கொண்டவன் என்ற வகையில் இந்தப் பணிகளை முன்னெடுப்பதில் தன்னார்வத்துடன் இந்தத் திட்டத்தினை முன்மொழிவதாகவும் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பிலான கடந்த கால ஆவண சேகரிப்புகளையும் அண்மையில் வெளியிடப்பட்ட தனது 'பாராளுமன்றத்தில் திலகர்' உரைத் தொகுப்பு நூலின் பிரிதியொன்றையும் உதவித் தூதுவர் முனைவர் எஸ். ஆதிரா அவர்களிடம் கையளித்துள்ளார்.
இச்சந்தப்பின்போது உதவித் தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கிருஷ்ணபிரசாத் அவர்களும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.