Captain Cool - பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்த தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி (MS Dhoni), தனது புகழ்பெற்ற புனைப்பெயரான கேப்டன் கூல் என்ற பட்டத்திற்கான வர்த்தக முத்திரை உரிமைகளை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளார்.
இதனால் விளையாட்டுப் பயிற்சி, பயிற்சி மையங்கள் மற்றும் கோச்சிங் போன்றவற்றுக்கு அந்தப் பெயரைப் பயன்படுத்த பிரத்யேக உரிமையைப் பெற்றுள்ளார்.
வர்த்தக முத்திரைகள் பதிவேடு போர்டலின்படி, தோனியின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக முத்திரை
கடந்த ஜூன் 16 ஆம் திகதி வெளியான அதிகாரப்பூர்வ வர்த்தக முத்திரை இதழில் இந்த பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தோனியின் வழக்கறிஞர் மன்சி அகர்வால் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதன்முதலாக இதற்காக முயன்ற போது வர்த்தக முத்திரைகள் சட்டத்தின் பிரிவு 11(1) இன் கீழ், ஏற்கனவே பதியப்பட்ட இதே போன்ற ஒரு முத்திரை இருப்பதால், இந்த சொற்றொடர் மக்களை குழப்பக்கூடும் என ஆட்சேபனைத் தெரிவித்துள்ளது பதிவகம்.
கவர்ச்சியான சொல்லாடல்
இருப்பினும், கேப்டன் கூல் என்ற சொல் தோனியுடன் தனித்துவமான பிணைப்பைக் கொண்டிருக்கிற்து என அவர் தரப்பில் வாதாடியுள்ளனர்.
நாடு முழுவதும் ரசிகர்களும் மற்றும் ஊடகங்களும் அவரை அந்தப் பெயரைப் பயன்படுத்தி அதனை தோனியின் பொது அடையாளமாக மாற்றிவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கேப்டன் கூல் என சொன்னாலே அது தோனியைக் குறிக்கும் வண்ணம் புதிய அர்த்தத்தைப் பெற்றுள்ளது என்றும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தளத்தில் மட்டும் இந்த பெயர் பயன்படுத்தப்படும் போது குழப்பம் ஏற்படாது என்றும் வாதாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, கேப்டன் கூல் என்பது வெறும் கவர்ச்சியான சொல்லாடல் மட்டுமல்ல, தோனியின் வணிக பிம்பத்துடன் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளது எனப் பதிவகம் ஏற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
