மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிக்கே வெற்றி! மார்தட்டிக் கொள்ளும் முஜிபுர் ரஹ்மான்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி முன்வைத்த உண்மைகளே வெற்றிபெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட நிலையில், அது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்துக்கு 159 பெரும்பான்மை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிக்கு 80 உறுப்பினர்களும் உள்ள நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவந்ததற்கான முதன்மை காரணம், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தபோது அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதற்கே ஆகும்.
நீதி அமைச்சரின் அலட்சியம்
பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்த அரசாங்கம், நீதி அமைச்சரின் பொறுப்பற்றத்தனத்தையும் அலட்சியத்தையும் மறைக்க முயல்கிறது.

விவாதத்தின் போது எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பலமான ஆதாரங்கள் மற்றும் கேள்விகள் எதற்கும் ஆளுங்கட்சி அமைச்சர்களாலோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாலோ பதிலளிக்க முடியவில்லை. நேரடிப் பதில்களைத் தவிர்த்து சம்பந்தமில்லாத விடயங்களையே ஆளுங்கட்சியினர் விவாதத்தில் பேசினர்.
கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அப்போதைய ஆளுங்கட்சியினர் அவரைப் பாதுகாத்து வாக்களித்த போதிலும், இறுதியில் அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல நேர்ந்தது.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வெளியனுப்புவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த தற்போதைய அரசாங்கமும் அதே தவறையே மீண்டும் செய்கிறது. இது தமக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |