முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகளவான மரணங்கள்
முல்லைத்தீவில் நேற்று காலை முதல் மாலை 5.30 மணிவரையில் நான்கு மரணங்கள் மாவட்ட மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள். கொரோனா தொற்று காரணமாக காலையில் கணுக்கேணி கிழக்கு பகுதியை சேர்ந்த 78 வயதுடைய குமாரசாமி யோகானந்தம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து தண்ணீரூற்று கிழக்கினை வசிப்பிடமாக கொண்ட 42 வயதுடைய சூசைப்பிள்ளை புலேந்திரன் என்ற குடும்பஸ்தர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் பெரியசாளம்பன் பகுதியினை சேர்ந்த 68 வயதுடைய முத்துசாமி ஆறுமுகம் என்ற வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அடுத்து முள்ளியவளை கிச்சிராபுரம் பகுதியினை சேர்ந்த 42 அகவையுடைய அப்துல் ரஹீம் ஜனுபா என்ற பெண் உயிரிழந்துள்ளார். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகியுள்ளது இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேநாளில் அதிகளவான மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன. மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறு சுகாதார பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில் அதனை மக்கள் உதாசீனம் செய்து வருகின்றமை முல்லைத்தீவு மாவட்டத்தில் அவதானிக்க முடிகின்றது.



