முல்லைத்தீவு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் விடுத்துள்ள கோரிக்கை!
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அழிவிற்கான நிவாரணங்களைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகளால் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு(T. Raviharan) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கமக்கார அமைப்புக்களின் அழைப்பையேற்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் மேற்கொண்ட கள விஜயத்தின் போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அந்தவகையில், உடையார்கட்டு கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, உடையார்கட்டுக் குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட 1800 ஏக்கர் நெற்பயிற்செய்கையில் பெருமளவான வயல் நிலங்கள் அறுவடைக்காகத் தயாராக இருந்த நிலையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பிரச்சினை
அதேபோன்று வள்ளிபுனம் இடைக்கட்டுக் குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்ட 175 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை மற்றும், தேவிபுரம் (அ) பகுதி காளிகோவில் வெளியில் செய்கை பண்ணப்பட்ட 66 ஏக்கர் பெரும்போக நெற் பயிர்ச்செய்கைகளில் பெருமளவான வயல்நிலங்களும் அறுவடைக்குத் தயாரானநிலையில் வெள்ள அனர்த்தத்தால் அழிவடைந்துள்ளன.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் தமது பாதிப்பு நிலைதொடர்பில் இதுவரையில் உரிய தரப்பினர்கள் எவரும் வருகைதந்து பார்வையிடவில்லை என விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பிலான கோரிக்கை கடிதங்களைத் தம்மிடம் கையளிக்குமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டதுடன், உரியதரப்பினருடன் பேசி விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |