முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுப்பு
முல்லைத்தீவில் (Mullaitivu) தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையம், மாவட்ட கூட்டுறவு கடற்றொழில் சமாசம் ஆகியவை இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றையதினம் (21.04.2025) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
அரசாங்கம் சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் அசமந்த போக்கு
கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற சட்டவிரோத கடற்றொழில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அன்னலிங்கம் நடனலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கிள் சட்டவிரோத தொழிலை செய்யும் விசமிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டதுடன் அவருக்கு உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகள் இனியும் இடம்பெற கூடாது, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட பிரச்சினைக்கு நீதிகிடைக்க வேண்டும் , குறித்த செயற்பாட்டில் காவல்துறையினரின் அசமந்த போக்கு மற்றும் குறித்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் போன்றவாறான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் பிரான்சிஸ், செயலாளர் Mm .ஆலம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் பிரதாஸ்,
மற்றும் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற்குரூஸ், கரைச்சி பிரதேச சமாச உபதலைவர் ரவி, கடற்றொழில் சங்கங்கள், நலன்விருப்பிகள், தென்றல் பெண்கள் அமைப்பினர்,விழுதுகள் இளைஞர் கட்டமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |















