விடுதலைப்புலிகள் தயாரித்ததாக சந்தேகிக்கும் பாரிய வெடிபொருள்!
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாரிய வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி மீனவர்கள் கரைவலைத்தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் மீனவர்களின் வலையில் சிக்குண்டு குறித்த வெடிபொருள் கரைக்கு வந்துள்ளது.
இவ்வாறு கரைக்கு வந்த வெடிபொருள் என மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வெடிபொருளை அகற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த கால போரின் போது, இந்த வெடிபொருள் கடலில் போடப்பட்ட நிலையில், தற்போது வலையில் சிக்கி கரை ஒதுங்கியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த வெடிபொருள் விடுதலைப்புலிகள் தங்களுடைய போர்கப்பல்களில் பொருத்துவதற்காக தயாரித்ததாக இருக்கலாமா என சந்தேகம் வெளியிடப்பட்டள்ளது.






