முல்லைத்தீவில் நுண்நிதி கடனை நிறுத்த கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்!
நுண்நிதி கடனை நிறுத்த கோரியும் பெண்களின் பாதிப்புக்களை வெளிப்படுத்தியும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்
நுண்நிதிக்கடனால் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதேவேளை புதுக்குடியிருப்பு நகரில் வடமாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யுவசக்தி பெண்ககள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி முன்பாக தொடங்கிய இப் போராட்டம் புதுக்குடியிருப்பு நகரினை சென்றடைந்து அங்கு போர8ாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
நுண்ணிதி கடன் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பில் துண்டு பிரசுரங்களையும் மக்களுக்கு வழங்கி வைத்துள்ளார்கள்.
நுண்நிதி கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 08 ஆம் திகதி ஹிங்குராங்கொடவில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதராவக இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்தின் போது அனைத்து நுண்கடன்களையும் இரத்துசெய்யவும்,கொள்ளைக்கார நுண்கடன் பற்றிய கடன் கணக்கு பரிசோதனை செய்யும் வரை கடன் மீள அறவிடுவதை இடைநிறுத்தவும்,கடனால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான நீதி நடவடிக்கைகள் அனைத்தையும் உடன் நிறுத்தவும், நுண்கடன்களினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை கிரிப் தரவுகளில் இருந்து அகற்றவும், பாதிப்புற்ற சமூக முன்னேற்றத்துக்கான பெண்களுக்கான,பெண்களாலான நிதி முறைமையொன்றை உருவாக்கவும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.

