ஒதியமலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கொடூரப் படுகொலையின் நினைவு!
முல்லைத்தீவு - ஒதியமலைப் படுகொலையில் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூரப்பட்டது.
நினைவு தினத்தை முன்னிட்டு ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மா சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு - ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி அதிகாலை புகுந்த சிறிலங்கா இராணுவத்தினர் அக்கிராமத்தின் வீடுகளில் இருந்த ஆண்களை மாத்திரம் அழைத்துச் சென்று படுகொலை செய்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் 27 ஆண்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், மேலும் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட 5 ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஒதியமலைப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று இடம்பெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு துாபியில் மலர் துாவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மா சாந்தி பிராத்தனைகள் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது.
நினைவு நாள் நிகழ்வில் உயிரிழந்தவர்களது உறவுகள் மக்கள் பிரதிநிதிகளான துரைராசா ரவிகரன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.