சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் சிலாவத்தை தெற்கு பகுதியில் இன்று (03) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு
தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்று இக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்டத்தின் இறுதியில் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
