முல்லைத்தீவில் வன்புணர்வுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் இல்லத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூங்கிலாறு கிராமத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, பாலர் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் கிராமத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள். இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் கிராமசேவையாளர் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜேன்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
கிராமங்களில் சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறையினை தடுப்பதற்கு மது, போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த வேண்டும் இவ்வாறு தொடர்ச்சியாக இடமளிக்க முடியாது இனிமேல் இவ்வாறு நடப்பதற்கு இடம் கொடுக்கமுடியாது என்பதற்காகத்தான் இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்த அமைச்சர் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமம் குடியேற்றப்பட்ட கிராமம், வறுமைப்பட்ட மக்கள் தான் வாழ்ந்து வருகின்றார்கள். பெண்தலைமைத்துவ குடும்பங்களும் வேலைவாய்பில்லாத போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் தான் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.
இங்கு நிரந்தர தொழில் இல்லாத நிலையில் அதனால் இவர்கள் சட்டவிரோத தொழிலில் மேற்கொள்வதற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதுவும் ஒரு காரணம் இவர்களுக்கு நிதந்தர தொழிலுக்கான ஏற்பாடு செய்தால் கிராமம் முன்னேறுவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த கிராமத்தில் இனிமேல் இவ்வாறான சம்பவம் ஒன்று நடக்காமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சரிடம் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
பெண்களுக்கான வாழ்வாதார உதவியனை மேற்கொள்வதுடன் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கும் அமைச்சு ஊடாக உதவமுடியும் பெண்களை வீடுகளில் இருந்து வேலைசெய்யக்கூடிய வகையில் பிரதே செயலாளர் ஊடாக கதைத்து முடிவு எடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு முதற் கட்டமான நடவடிக்கை அமைச்சின் கீழ் எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிராமத்தில் கிராம சேவையாளர் என்றும் மக்களுடன் ஒத்துளைப்பு வழங்கி வருவதாக தெரிவித்த மக்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு சட்டத்தில் தண்டனையினை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆறு மாத காலத்திற்குள் வெளியில் வந்துவிடுகின்றார்கள் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.