மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் முல்லைத்தீவு
2026ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் (27) தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வந்தது பல்வேறு கெடுபிடிகளும் இடம்பெற்றிருந்தன.
நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள்
இம்முறையும் சில கெடுபிடிகள் காணப்பட்டாலும் மாவீரர் நாளை நினைவு கூருவதற்காக பிரமாண்டமான அளவிலே முல்லைத்தீவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், கோடாலிக்கல்லு களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம், மணலாறு ஜீவன் முகாம் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம், பச்சைப் புல் மோட்டை மாவீரர் துயிலும் இல்லம், இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், ஆகிய துயிலும் இல்லங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.
மேலும் அம்பலவன் பொக்கணை சாள்ஸ் மண்டப வளாகம், முல்லைத்தீவு கடற்கரை, ஆனந்தபுரம், கற்சிலைமடு, புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபம் ஆகிய பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களிலும் இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |