திருகோணமலையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப்படுகொலையின் போது கொல்லப்பட்டோரை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் சிவன் கோயிலடியில் இன்று (17) குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு வீதியில் வீசப்பட்ட உடல் : செம்மணி - முள்ளிவாய்க்கால் வரையான சாட்சியங்கள்
உயிழந்தவர்களுக்கு அஞ்சலி
இந்த நிகழ்வில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்மாக உயிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் சிக்குண்டு பரிதவித்தோரின் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இதேவேளை நாளை (18) மாலை வரை திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட பேருந்து சேவை
அத்துடன் நாளை முள்ளிவாய்கால் முற்றத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலையிலிருந்து செல்வோருக்கான விசேட பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு மற்றும் படுகொலைகளுக்கெதிராக நீதி வேண்டி நடைபெறும் இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்திப்போம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகள் - ஹஸ்பர்
மூதூரில் நினைவேந்தல் நிகழ்வு
இதேவேளை முள்ளிவாய்க்கால் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் - பாரதிபுரம் பிரதேசத்தில் இன்று (17) காலை இடம்பெற்றது.

பாரதிபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - புகாரி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |