வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது
இரண்டாம் இணைப்பு
கொழும்பு (Colombo) - வெள்ளவத்தை (Wellawatte) பகுதியில் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொழும்பிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகள் இன்று (19.5.2024) காலை வெள்ளவத்தை (Wellawatte) தொடருந்து நிலையத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இன்று வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் நினைவேந்தல்களுக்கு ஆதரவாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் வகையிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலியகொடவின் மனைவி சந்தியா எக்னலியகொட, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன், அனைவரும் வெள்ளை மலர்களை கடலில் தூவி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்துள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்ட பகுதியில் அதிகளவான சிறிலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |