முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை குழப்பும் இந்திய புலனாய்வு: கஜேந்திரன் எம்.பி பகிரங்கம்
எமது வரலாற்று நிகழ்வான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை குழப்பும் நோக்கில் காவி உடை தரித்த இந்திய புலனாய்வு அமைப்பு செயற்பாட்டு வருகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் (jaffna) - நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை வரலாற்று நினைவிடத்தை நேற்று (17) பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 75 வருட காலமாக ஆட்சி பீடம் ஏறிய எந்த ஒரு அரசாங்கமும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களை முன்னெடுத்துச் செல்லாத நிலையில் தமிழ் மக்கள் எதிர்வரும் அதிபர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 15ஆவது நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அனைத்து தமிழ் மக்களும் எதிர்வரும் அதிபர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற சபதத்தை எடுக்க வேண்டும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களை கொலை செய்து துன்புறுத்தி மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி அட்டூழியங்களை செய்து வந்துள்ளது.
தமிழ் தலைவர்கள் ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய போது சிங்கள அரசாங்கம் அவர்களை கொலை செய்த நிலையில் 1980 பின் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் இருப்புக்காகவும் தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதம் ஏந்துவதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.
இனப் படுகொலை
தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறிய சிங்கள அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த வரலாற்றே மிஞ்சியது. 2006 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சர்வதேசத்தின் உதவியுடன் சுமார் ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள்.
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததில் சிறிலங்கா முப்படையுடன் சேர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்ட தமிழ் ஆயுத குழுக்களான கருணா குழு, பிள்ளையான் குழு , புளொட் அமைப்பு, டக்ளாஸ் தேவானந்தாவின் ஈபிடிபி, சிறிரெலோ ஆகியவற்றினால் படுகொலை செய்யப்பட்டவர்களை நல்லூரில் காட்சிப்படுத்தியுள்ளோம்.
இதனை ஏன் காட்சிப்படுத்தினோம் என்றால் எமது இனத்தை படுகொலை செய்த வரலாறுகள் எதிர்கால சந்ததியினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவும் எதிர்கால சந்ததியினருக்கு இதனை எடுத்துச் செல்லும் நோக்கிலும் காட்சிப்படுத்தினோம்.
2010 ஆம் ஆண்டிலிருந்து எமது இயக்கம் இறுதி யுத்ததில் எமது மக்கள் அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எமது எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் நோக்கில் எமது இயக்கமே ஆரம்பித்து வைத்தது.
அதிபர் தேர்தல்
தமிழ் மக்கள் ஒற்றை ஆட்சியையும் பதின் மூன்றாவது திருத்தத்தையும் ஏற்க மறுத்ததன் விளைவே எமது இனம் அழிக்கப்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்தது.
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தமிழ் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எமது இனத்தின் மீது நிகழ்த்தப்பட்டது இனப் படுகொலை என்பதை இலங்கை அரசும் சர்வதேசமும் ஏற்க வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை பாரப்படுத்துவதே தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும்.
முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவுக்கு நாம் ஒன்றை கூற விரும்புகிறோம் நாங்கள் பலமுறை வலியுறுத்தினோம் முள்ளிவாய்க்கால் நினைவு வார இறுதியில் எமது உறுதி மொழியாக ஒற்றை ஆட்சியை நிராகரிப்போம் 13 வது திருத்தத்தை நிராகரிப்போம் நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டு வந்த ஏக்கிய ராஜ்சிய என்ற இடைக்கால வரவை நிராகரிப்போம் என உறுதிமொழி எடுக்குமாறு கூறியிருந்தோம் அது நடைபெறவில்லை.
ஆகவே எமது பயணத்தை யாரும் திசை மாற்றக் கூடாத நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலை எமது மக்கள் புறக்கணிப்பதோடு இந்திய காவியப் புலனாய்வாளர்கள் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |