தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் [காணொளிகள்]
மன்னார் - 1
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18.05.2023) உணர்வு பூர்வமாக தமிழ் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(18) காலை 8 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதோடு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத தலைவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது - முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து நேரலை |
யாழ் - பல்கலை
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இன்று மாலை 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இடம்பெற்றது.
இதன் பொழுது பொதுசுடர் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது.
தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது, தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
கொழும்பு
கொழும்பு பொரளை பொது மயான சுற்றுவட்டாரத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் வெள்ளை மலர்களுடன் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியானது(காணொளி) |
மன்னார் - 2
தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் இ முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம் பெற்று வரும் நிலையில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம்(18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் தமிழின படுகொலை அஞ்சலி நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் தமிழின படுகொலை நினைவு நாள் மே-18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.
இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவேந்தல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மெசிடோ நிறுவன பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை - உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் பூசை நடைபெறுகிறது! |
மட்டக்களப்பு - 1
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று மே-18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கிரான் சின்னவெம்பு கிராமத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளும் தமிழர் தாயக மக்களும் இணைந்து இன்று காலை இவ் நினைவு தினத்தினை நினைவு கூர்ந்தனர்.
இதன்போது உயிர் நீத்த உறவுகளினை நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றியதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் உயிர் நீத்தவர்களின் நினைவாக தென்னங் கன்றுகளும் வழங்கப்பட்டன.
வவுனியா
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அனுஸ்டிக்கப்பட்டது.
போராட்டம் இடம்பெறும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகைக்கு முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பின்னர் மலர் தூவி மெழுகுதிரி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு - 2
மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இந்து, இஸ்லாம், மற்றும், கிறிஸ்த்தவ மக்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்ததுடன், முள்ளி வாய்க்காலில் அப்போது மக்கள் தம்மிடமிருந்த அரிசியை கஞ்சி காய்சி சிரட்டைகளிலே அருந்தியது போன்று தாதும் 14 வருடங்கள் கழிந்தாலும் அந்த வலியை அனுபவிப்பதற்காக இதன்போதும் உப்புக் கஞ்சி காய்ச்சி சிரட்டைகளில் அனைவரும் பகிர்ந்து உண்டனர்.
இதன்போது கலந்து கொண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்திதோடு, தமது ஆதங்கங்களையும் தெரிவித்தனர்.
இதன்போது இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டு இறந்த உயிர்களுக்காக இறைபிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
நந்திக்கடல்
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திவேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த அஞ்சலியின் பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கரைதுறைப்பற்று தொகுதிக் கிளை செயலாளர் அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன், தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனுஷ்கோடி
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இலங்கையில் உள்நாட்டு போரின் போது ஈழத் தமிழர்களை கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களால் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்புகைப்படத்தை தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து கடலில் விடப்பட்ட பின்னர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அம்பாறை
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பூசை வழிபாடுகள், அஞ்சலிப் பிரார்த்தனைகளுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டக் கிளைகளின் ஏற்பாட்டில் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் நாவிதன்வெளி முருகன் ஆலயத்தில் மேற்படி நினைவேந்தல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் அவர்களி ஆத்மா சாந்திக்காகவும் கூட்டுப் பிரார்த்தனைகள், பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
