திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை!
திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பெண்கள் நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று (20) அழைத்து வரப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான கடந்த ஞாயிற்றுகிழமை (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதையடுத்து, இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை விடுதலை செய்வதற்கான நகர்த்தல் பத்திரம் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) நால்வரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
நகர்த்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டமையால் அன்றைய தினம் சந்தேக நபர்களும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை எனினும் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
விடுமுறை தினங்கள்
இந்த நிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அவர்கள் இன்று மூதூர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து தற்போது வரை தமிழ் மக்கள் அடக்குமுறையிலேயே உள்ளனர்.
ஒரு ஆலயத்தில் கூடி அன்னதானம் வழங்குவதற்கு கூட எங்களுக்கு உரிமை இல்லை அத்தோடு எங்களை மீட்டெடுப்பதற்கு முயற்சியை மேற்கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மூதூரில் #முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதாக கைது செய்யப்பட்ட தமிழ்த்தேசிய முன்னணியை சேர்ந்த @TnpfOrg ந.கரிஹரகுமார், பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வரும் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். #Tamil #Trincomalee #LKA #WorldwideTamils pic.twitter.com/jveo5Hiq2p
— Worldwide Tamils (@senior_tamilan) May 20, 2024
