உலக நாடுகளை நோக்கி சாட்சியங்களோடு போராடும் ஈழத் தமிழினம்!!
முள்ளிவாய்க்கால் இது முடிந்து போன புள்ளியல்ல மாறாக விடுதலைக்கானதும் நீதிக்கான ஆரம்பம். சர்வதேச அரங்கினை அதிர வைத்துக் கொண்டிருக்கும் சொல். மாண்டவர் மட்டுல்ல மீண்ட இனத்தின் இரத்த சாட்சியமாய் விரிந்து கிடக்கிறது முள்ளிவாய்கால் முற்றம்.
எம்மண்ணின் விடுதலையின் விழுதுகளாய், மாண்டவர்களை மாண்பேற்றுவோம். 2009 ஈழத்தமிழினத்தின் கறைபடிந்த ஆண்டு என்றால் மே 18 இரத்த கறை படிந்த வரலாற்று நாள்.
இன விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடிய பல இனங்கள் பூமி பந்தில் வெற்றி கண்டுவரும் நிலையில் தமிழினமும் தொடர்ந்தும் இன அழிப்பின் சாட்சியங்களுடன் போராடிவருகின்றது.
தென்னிலங்கை ஈழத்தமிழினத்தின்மீது கட்டமைப்பு ரீதியாக மேற்கொண்ட இன அழிப்பு வடக்கு கிழக்கு எங்கும் வியாபித்திருந்து. சத்துருக்கொண்டான் படுகொலையும் குமுதினி படுகொலையும் சாட்சியத்தின் அடையாளங்களாகும். இது போல படுகொலைகள் தமிழினத்திற்கு எதிராக, பாலியல் துன்புறுத்தல்கள், கடத்தல், கொள்ளை, தீ மூட்டால் என இனவழிப்பின் பட்டியல் நீண்டு கொண்டு போகிறது.
யாழ் நூலக எரிப்பு ஈழத்தமிழினத்தின் அறிவியல் மீதான அழிப்பு. வெறுமனே அழிப்பு மட்டுமல்ல இது தமிழினத்தின் கல்வி மீதான வெறுப்பு பொறாமை. பல சதிகளும், ஆக்கிரமிப்புக்களும், ஆயுத அடக்குமுறைகளும் தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போதிலும் மனதளவில் தளராத திடத்துடன் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடிக் கொண்டு தான் இருக்கிறது தமிழினம்.
தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு தமிழினத்தின் கல்வியில், கலாசாரத்தில், பொருளாதாரத்தில், நிலத்தில் என்றுமே ஏக்கம். ஆண்ட இனத்தை சூழ்ச்சியால் அடக்கிய போதிலும் அடங்காதமிழனை அடங்கிவிடவில்லை.
இனம், மதம், நிலம், கலாசாரம், பண்பாடு என அனைத்தையும் தென்னிலங்கை அழிக்க திட்டம் தீட்டிய போதிலும் அதனை முடித்துக் கொள்ள தமிழினம் இடம்கொடுக்கவில்லை.
இனத்தினை வேரறுத்து தம் சிந்தனையை திணித்துவிட பேரினவாதம் பௌத்த மத ஆசியுடன் முனைந்து வருகிறது. இந்த நிலையில் முள்ளிவாய்காலில் அழித்தவர்களை நினைப்பதற்கும் பூசிப்பதற்கு தடைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனைவிட ஒருபடி மேலே போய் நினைவு தூபிகளையும் சிதைத்துள்ளது. என்னிலை வந்தாலும் தன்னிலை மாறாத தமிழினம் ஈழ விடுதலைப் போரில் கொல்லப்பட்டவர்களை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் துதிக்கத் தான் போகிறது.
இது அவர்களின் வரலாற்றுக் கடமையும் கூட. வாரீ்ர் அவர்கள் பாதம் தொட்டு எம் வணக்கத்தையும் பிரார்த்தனைகளையும் சமர்ப்பிப்போம்.