மன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலய பிரதான வாயிலில் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி.டெனி கலிஸ்டஸ் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபையின் அருட்சகோதரிகள் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று(18) இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாக இறுதி யுத்தத்தில் இறந்து போன மக்களை நினைத்து பங்குத்தந்தை பங்கு மக்கள் முன்னிலையில் சுடர் ஏற்றினார்.
மெழுகுவர்த்திகளை ஏற்றி இறந்து போன உறவுகளுக்காக அஞ்சலி
அதனைத் தொடர்ந்து மக்கள் ஆலயத்தை நோக்கி பேரணியாக சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு பாதையின் முன்னிலையில் மரியாதை செலுத்தி மலர் கொத்துக்களை வைத்த பின்னர் மெழுகுவர்த்திகளை ஏற்றி இறந்து போன தம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து வழிபாடு இடம்பெற்றது. இவ்வழிபாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வாசிக்கப்பட்டமையுடன், இறந்து போன காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்காக மன்றாட்டுக்களும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
தொடர்ந்து ஆலயத்தின் பிரதான வாயிலில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி மன்னார் மறைமாவட்டத்தின் குரு முதல்வர் அருட்பணி.கிறிஸ்து நேசரட்ணம் அடிகளாரினால் ஆசீர்வதிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மறைமாவட்ட குருக்களும் கலந்து கொண்டமையுடன், நிகழ்வை கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் சிறப்பாக ஒழுங்குபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்றைய தினம்(18.05) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார்(mannar) கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிரணித் தலைவி லூக் ஷோபனா அலெக்சாண்டர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் துரைராசா ஜோன்சன், மன்னார் கலையருவி இயக்குனர் அருட்பணி லக்சன் அடிகளார், அருட்பணி அருட்பிரகாசம் அடிகளார், செல்வ நகர் சிறி முத்துமாரியம்மன் கோயில் குருக்கள் பாபு சர்மா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













