முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்- தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் சுடரேற்றி அஞ்சலி!
முள்ளிவாய்கால் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா அரச படைகளால் கட்டவிழ்க்கப்பட்ட கொடூர இனப்படுகொலையின் போது உயிரிழந்த அப்பாவி பொதுமக்களை நினைவு கூரும் வகையில் வருடம் தோறும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வந்தன.
ஆனால் இந்தவருடம் நினைவேந்தலை தடை செய்யும் நோக்கிலும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடை செய்யவும் மேற்கொள்ளப்பட்ட அராஜகமான செயற்பாடே நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத் தூபி இடித்தழிப்பு என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே கொரோனா பரவலை சாதகமாக பயன்படுத்தி தடை விதித்துள்ள போது மக்களும் அரசியல் தலைவர்களும் தத்தமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் நினைவேந்தலை அனுஸ்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.