இனப்படுகொலையாளிகள் எனும் பெயரைப் பெற்றிருந்த ஸ்ரீலங்கா இராணுவம் திருடர்கள் எனும் பட்டத்தையும் வசப்படுத்தியுள்ளது!
இனப்படுகொலையாளிகள் எனும் பெயரைப் பெற்றிருந்த ஸ்ரீலங்கா இராணுவம் நேற்று முதல் திருடர்கள் எனும் பட்டத்தையும் தம் வசப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
நினைவு துாபி சேதமாக்கப்பட்டதுடன் அங்கு கொண்டு செல்லப்பட்ட பொது நினைவுக் கல்லும் காணாமல் போயுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி, இராணுவ தளபதி, மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஈழ தமிழர்கள் உயிரிழந்த பின்னரும் நிம்மதியாக இளைபாற முடியாது என்பதையே முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்ற சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும் சட்டத்தரணி சுகாஸ் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியான முறையில் நினைவிற்கொள்ள ஈழத்தமிழினம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் அரச அதிகாரத்தின் பக்கத்துணையுடன் இனப்படுகொலையின் சாட்சியாக அமைதியாக உறங்கிக்கொண்டிருப்பவர்களின் அடையாளமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியின் பாகங்கள் அகற்றப்பட்டு தமிழ்மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாள் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டு கொரோனாவை தடுக்கின்றோம் என்ற போர்வையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் படையினரை தவிர வேறு எவரும் இந்த அநாகரிகமான செயலினை மனித குலத்திற்கு ஒவ்வாத செயலை செய்திருக்கமுடியாது. இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியினை உடைத்து அகற்றியதுடன் மட்டுமல்லாமல் மதத்ததலைவர்களால் கொண்டுவரப்பட்ட கல்லினையும் தூக்கியுள்ளார்கள்.
இது சட்டத்தின் பிரகாரம் களவு, இதனை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் செய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இனப்படுகொலையாளிகள் என்ற பெயரை சூடிநின்ற இலங்கை இராணுவம் திருடர்கள் என்கின்ற பெயரை புதிதாக வாங்கியுள்ளார்கள். இங்கு நடைபெற்றது ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடச்சியாக நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு அங்கம்.
பல்கலையில் தூபியினை உடைத்தீர்கள் தூபி புதிதாக மலர்ந்தது வரலாறு தெரியாதவர்களுக்கும் வரலாறு பாச்சப்பட்டது. ஒருபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வெளிச்சியினையோ விடுதலை உணர்வினையோ கட்டுப்படுத்த முடியாது மாறாக விடுதலைத் தீயினை வரலாறு தெரியாத சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிர்கால சந்ததிக்கும் கடத்துவதற்கும் இப்படியான விடயங்கள் வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதுடன் இவற்றுக்கு எல்லாம் முடிவு காணவேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்.
சிலை உடைக்கப்பட்டிருப்பது ஈழத்தமிழர்களுக்கும் உயிரோடு மட்டுமல்ல இறந்த பின்னும் நின்மதியாக இழைப்பாற முடியாது என்பதைத் தான் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்