சரத் பொன்சேகா படுகொலை முயற்சி! 17 வருடங்களின் பின்னர் சந்தேகநபர்களுக்கு பிணை
17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்காக, விடுதலைப் புலிகளில் நடத்தியதாக கூறப்படும் தற்கொலை தாக்குதலுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ராகல நேற்று முன்தினம்(30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இருப்பினும், நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால், இரு பிரதிவாதிகளையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளாார்.
பிணை நிபந்தனைகள்
பிரதிவாதிகளுக்கு தலா ரூ. 200,000 ரொக்கப் பிணையும், தலா ரூ. 500,000 மதிப்பிலான நான்கு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன.எனினும், அவர்களால் இந்த தொகையையும் பிணையாளர்களையும் சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.

பிணை நிபந்தனைகளின்படி, அவர்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமை காலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும், அவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகிய இருவருக்குமே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
17 ஆண்டுகள் நீண்ட காலமாக விளக்கமறியலில் இருப்பதை சுட்டிக்காட்டி, பிரதிவாதிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததன் அடிப்படையிலேயே மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
230 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு
கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் திகதி கொழும்பு ராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகே “துர்கா” என்ற விடுதலைப் புலிகள் உறுப்பினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக 230 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் அன்றைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன் அவரது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு ராணுவ சார்ஜென்ட், மூன்று கோப்ரல்கள் உட்பட ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்திருந்தனர்.
இந்த வழக்கிற்கு மேலதிகமாக போரலஸ்கமுவ பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொல்ல முயன்ற வழக்கு மற்றும் வேலிவேரியவில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலைக்கு உடந்தையாக இருந்த வழக்கு ஆகியவற்றிலும் இவர்கள் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில், பிரதிவாதிகளுடன் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் லக்ஷ்மன் குரேவும் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கில் இவர்களுக்கான பிணை உத்தரவு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்வராசா கிருபாகரன் என்ற மொரிஸ், வேறொரு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க முன்னிலையாகியுள்ளதுடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுரங்க பண்டார மற்றும் சட்டத்தரணி ஆர்னோல்ட் பிரியந்தன் அடங்கிய சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |