விமானத்தில் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகளால் பரபரப்பு
குளிரூட்டி வேலை செய்யவில்லை எனத் தெரிவித்து விமானி அறைக்குள் பயணிகள் இருவர் நுழைய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஜெட் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏழு மணிநேர தாமதமாக வந்த விமானம்
டில்லியில் இருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட்டின் எஸ்ஜி 9282 விமானம் நேற்று ( ஜூலை 14 )பகல் 12.30 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால், இரவு 7.21 மணிக்கு புறப்பட்டு மும்பைக்கு 9.05 மணிக்குதான் வந்து சேர்ந்தது.
இந்த விமானம் 7 மணிநேர தாமதத்துக்கான காரணம் மர்மமாக இருந்தது. தற்போது காரணத்தை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகள்
டில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். விமான நிலையத்தில் ஓடுதளத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் விமானி அறைக்குள் நுழைய முயற்சித்தனர்.
விமான கப்டன், விமான ஊழியர்கள், சக பயணிகள் கோரிக்கை வைத்தும் இருவரும் இருக்கைக்கு திரும்ப மறுத்துவிட்டனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானம் மீண்டும் நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர். பின்னர் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

