'800' திரைப்படம் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முரளி
தமிழீழ விடுதலைப்புலிகளால் தனக்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை எனவும் அவர்களின் கட்டுப்பாட்டு பகுதிக்கு தான் மூன்று முறை சென்று வந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
‘முரளிதரன் 800’தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் இணைய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலையும் விளையாட்டையும் வேறுபடுத்தி
விடுதலைப்புலிகள் அரசியலையும் விளையாட்டையும் வேறுபடுத்தி பார்த்தனர். கடந்த 2002 ஆம் ஆண்டு ஐ.நாவின் உணவுத்தூதுவராக இருந்த நான் விடுதலைப்புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு மூன்றுமுறை சென்று வந்துள்ளேன்.எனினும் விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு விடுதலைப்புலிகளின் பகுதிக்கு சென்றவேளை அங்கு மதிய உணவையும் உட்கொண்டேன். சுனாமி அனர்த்தத்தின் போதும் விடுதலைப்புலிகளின் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மக்களுக்கு தேவையான உணவு வழங்கல் செயற்பாட்டையும் முன்னெடுத்ததுடன் மக்களுடன் நேரடியாக கதைத்து பாதிப்புக்கள் தொடர்பிலும் கேட்டறிந்தேன்.
ஒருபோதும் திரிபுபடுத்தவில்லை
இந்த காலக்கட்டத்தில் நான் பார்த்த மற்றும் எதிர்நோக்கிய விடயங்களே முத்தையா முரளிதரன் சுயசரிதையை தழுவி '800' என்ற பெயரில் வெளியாகும் திரைப்படத்தில் இடம்பிடித்துள்ளதாகவும், பிரமாண்டத்திற்காக கதைகளை ஒருபோதும் திரிபுபடுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.