தையிட்டி விகாரை குறித்த அர்ச்சுனாவின் கருத்து : முரளிதரன் கடும் எதிர்ப்பு
யாழில் (Jaffna) ஜனாதிபதி பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் (E. Muralitharan) கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தனது இல்லத்தில் வைத்து நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய விளானில் இருப்பதாக கூறும் தனது பத்து ஏக்கர் காணியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பாரா ?
மக்கள் காணி
வடக்கு, கிழக்கில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்று காணப்படுகிறார்கள், அவர்களுக்கு அர்ச்சுனாவால் காணியை கொடுக்க முடியுமா ?
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மண்டைதீவில் கடற்படை சுவீகரித்துள்ள காணியை மக்களுக்கு முடிந்தால் பெற்றுக் கொடுக்கட்டும்.
காணி தொடர்பான முழுமையான காணி விபரங்கள் அர்ச்சுனா உட்பட்ட எந்தவித நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கிடையாது, இவர்கள் காணி தொடர்பில் எப்படி சரியான விடயங்களை கொண்டு செல்ல முடியும் ?
வடமராட்சி கிழக்கில் கோரியடியில் இருந்து சுண்டிக்குளம் வரை மக்களின் காணிகள் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய பூங்கா
தேசிய பூங்காவில் மக்கள் இருக்க முடியாது ஆனால் மக்கள் வசிக்கின்றார்கள், காலப்போக்கில் அவர்களை காணியை விட்டு அகற்றுவார்கள்.
இது தொடர்பான விடயங்களை அர்ச்சுனா முதலில் தேடி அறிந்து பேச வேண்டும், மக்களின் காணி பிரச்சனைகள் எங்கெல்லாம் காணப்படுகின்றது என்பதனை அர்ச்சுனா எங்களிடம் கேட்டால் கூட்டிச் சென்று காட்டுவோம்.
மக்களின் காணி என்று தெரிந்தும் அதை அபகரித்து விகாரைகளை கட்டினார்கள், முகாம்களை அமைத்தார்கள்.
மக்களின் காணியை அபகரித்து என்ன கட்டினாலும் அதை இடிக்கத்தான் வேண்டும், அதை தவறென கூறும் அர்ச்சுனா முதலில் காணி தொடர்பான முழுமையான ஆவணங்களை தேடி அறிந்து கொண்டு பேச வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |